மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுமா?
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊட்டி
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குளுகுளு சீசன்
மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மலை ரெயிலில் பயணம் செய்தவாறு இயற்கை எழில் சூழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் சிறந்த பாரம்பரியமாக மலை ரெயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடங்கி மே மாதம் வரை கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குளுகுளு சீசனை அனுபவிக்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத்தொடர்ந்து வழக்கமாக இயக்கப்படும் மலை ரெயிலுக்கு இணையாக கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இதனால் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி, குன்னூர் பகுதியில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக சீசன் காலங்களில் கூடுதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை சிறப்பு மலை ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டி ரெயில் நிலையத்தில் அலைமோதுகிறது. இதனால் போதிய இருக்கைகள் இல்லாமல் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
சிறப்பு மலை ரெயில்
மலை ரெயிலில் பயணம் செய்வது புதிய அனுபவத்தை கொடுக்கும். இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்வது தனி சுகம். அடுத்த மாதம் மலர்க் கண்காட்சி உள்பட கோடை விழாக்கள் நீலகிரி மாவட்டத்தில் களைகட்ட உள்ளது. இதனால் இன்னும் பல மடங்கு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர உள்ளனர். எனவே ரெயில்வே நிர்வாகம் சிறப்பு மலை ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.