பேச வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்ததால்.. 2½ வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை

பேச வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்ததால் 2½ வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-24 07:51 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்ற பூபதி (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி கோட்டீஸ்வரி (32). இவர்களுக்கு பிரித்திகாதேவி (13), ஹரிணி (7) என்ற மகள்கள் உள்ளனர். இவர்களுடைய மகன் ஹரிஹரசுதன் (2½). வாய்பேச முடியாத மற்றும் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஹரிஹரசுதனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் ஹரிஹரசுதன், இனி பேச வாய்ப்பு இல்லை. இந்த நோயை குணப்படுத்துவது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பூபதியும், கோடீஸ்வரியும் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை பூபதி வேலைக்கு சென்றுவிட்டார். மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மகள்கள் வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் வெளியிலேயே அமர்ந்திருந்தனர்.

அதே நேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பூபதியிடம் மகள்கள் கதவை தட்டியும் திறக்கப்படாதது குறித்து தெரிவித்தனர். பின்னர் பூபதி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தன்னுடைய மனைவி நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனது மகனை காணாமல் வீடு முழுவதும் தேடி பார்த்தபோது அருகில் இருந்த 3 அடி அகலம், 4 அடி ஆழம் உள்ள தரைமட்ட குடி தண்ணீர் தொட்டியில் குழந்தை ஹரிஹரசுதன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோட்டீஸ்வரி, தனது குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றுவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோட்டீஸ்வரியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்