ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் 2-ந் தேதி முதல் மீண்டும் இயக்கம்

ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

Update: 2022-04-23 22:10 GMT
சேலம்,
ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக தினமும் ஜோலார்பேட்டைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஈரோடு-ஜோலார்பேட்டை முன்பதிவில்லா பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண்-06412) வருகிற 2-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஈரோட்டில் தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் ரெயில், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு காலை 7.42 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு 7.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.10 மணிக்கு செல்லும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்- 06411) தினமும் ஜோலார்பேட்டையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மாலை 5.57 மணிக்கு வந்து சேரும். பின்னர் 6 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 7.45 மணிக்கு சென்றடையும். 
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்