ஆழ்வார்குறிச்சியில் பரிதாபம்: பள்ளிக்கூட பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி

பள்ளிக்கூட பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-04-23 22:07 GMT
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். கூலி தொழிலாளி. இவருடைய  மகன் சைலப்பன் (வயது 17). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தினமும் அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சைலப்பன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சைலப்பன் பயின்ற பள்ளிக்கூடத்தின் பஸ், மாணவர்களை ஏற்றிக்கொண்டு பொட்டல்புதூருக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சானது ஆழ்வார்குறிச்சி பஸ் நிலைய அண்ணா சிலை அருகில் திரும்பியபோது, அங்கு நின்று கொண்டிருந்த சைலப்பனின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சைலப்பனை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்வார்குறிச்சியில் பள்ளிக்கூட பஸ் ேமாதி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்