பவானி அருகே பரபரப்பு கல்-மரக்கட்டை வைத்து கிராம சாலை அடைப்பு

பவானி அருகே கிராம சாலையை கல்-மரக்கட்டை வைத்து அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-23 21:53 GMT
பவானி
பவானி அருகே கிராம சாலையை கல்-மரக்கட்டை வைத்து அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
கிராம சாலை 
பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் ஊராட்சியில் முத்துகவுண்டன் புதூர், பரசுராமன் காட்டூர் என்ற 2 கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 40 வருடங்களுக்கு மேலாக மேட்டூர் மேற்குக்கரை கிளை வாய்க்கால் வழியாக உள்ள சாலையில் சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த வழித்தடம் தனியாருக்குச் சொந்தமானது எனக் கூறி, 40 அடி நீளத்துக்கு அப்பாதையை வெட்டி ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். 
இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த மாதம் 14-ந் தேதி துண்டிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கல் வைத்து தடை
சாலை அமைக்கப்பட்டதால் 2 கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி இருவர் அமைக்கப்பட்ட சாலையின் குறுக்கே நேற்று முன்தினம் கற்கள், மரக்கட்டைகளை அடுக்கி வைத்து அடைத்திருந்தனர். இது குறித்து அப்பகுதியினர் கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து  கிராம மக்கள் பவானி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்