விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு;அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
நாகர்கோவிலில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்கினார்.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தன. இதை தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தன்னம்பிக்கை
கடையாலுமூடு பகுதியை சேர்ந்த சமீரா என்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு வெளிநாடு செல்வதற்கு பல தடைகள் இருந்தன. இதற்கு கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் களரி போன்று பல்வேறு பெயர்களில் சிலம்பக்கலை அழைக்கப்படுகிறது. இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் சிலம்பக்கலை குறித்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அந்த கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக என்னிடம் அவர் கூறினார். விளையாட்டு என்பது நமது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். மாற்றுத்திறனாளிகள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்கூட்டர்கள்
இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 36 மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், மரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரசல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.