நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணி செய்த மேயர்
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேயர் மகேஷ் மேற்கொண்டார். பின்னர் அண்ணா பஸ் நிலையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேயர் மகேஷ் மேற்கொண்டார். பின்னர், அண்ணா பஸ் நிலையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூய்மை பணியில் மேயர்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பூங்காவுக்கு ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இங்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் பூங்காவில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதவிர மாதம் தோறும் சிறப்பு துப்புரவு பணிகள் நடந்து வருகிறது. இதன்படி நேற்று வேப்பமூடு பூங்காவில் தூய்மை பணியாளர்கள் மூலம் மாதாந்திர துப்புரவு பணிகள் நடந்தன. இந்த பணியை மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது, தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் ஆகியோரும் துப்புரவு பணியை மேற்கொண்டனர். இதில் மாநகர் நலஅதிகாரி விஜயசந்திரன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மதாவன் பிள்ளை, ராஜா மற்றும் வாா்டு கவுன்சிலர்கள், இந்து கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இதைதொடர்ந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயனற்ற நிலையில் இருந்ததை பார்த்தார். தொட்டியை உடனடியாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பார்வையிட்டு, அதை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்குள்ள கட்டண கழிவறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டீக்கடைகள் உள்பட சில கடைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான பகுதியை ஆக்கிரமித்து பொருட்களை பயணிகளுக்கு இடையூறாக வைத்திருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக இடங்களை ஆக்கிரமித்து வைக்கக் கூடாது என்று கூறி பொருட்களை உடனே அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார். கடைக்காரர்களும் அந்த பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டனர்.