மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி 2 வியாபாரிகள் பலி டிரைவர் கைது

பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 வியாபாரிகள் பலியானார்கள். இதையடுத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-23 20:19 GMT

பழனி :

வியாபாரிகள்
திருப்பூர் மாவட்டம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). மளிகை கடை வியாபாரி. இவர் நேற்று தனது மனைவி பவித்ராவுடன் (30) சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பழனிக்கு வந்தார். பின்னர் அவர்கள் வேலை முடிந்து கொழுமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த வியாபாரி சாகுல்அமீது (55).  இவர் தனது மனைவி ஜாபர்நிஷாவுடன் பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர்கள் நேற்று ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். 

கார் மோதல்
பழனி அருகே அக்கமநாயக்கன்புதூர் பகுதியில் கொழுமம் சாலையில் மாரிமுத்துவும், சாகுல்அமீதுவும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, பழனி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மாரிமுத்து, சாகுல்அமீது ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மாரிமுத்து உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காயமடைந்த 2 தம்பதிகளையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து, சாகுல்அமீது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பவித்ரா, ஜாபர்நிஷா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த கார் டிரைவர் மகேந்திரனை(35) கைது செய்தனர். 

மேலும் செய்திகள்