போலி ஆவணங்கள் தயாரித்து கைதிகளுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்த பெண் உள்பட 9 பேர் கைது

பெங்களூருவில் போலி ஆவணங்கள் தயாரித்து கைதிகளுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்த பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-04-23 20:15 GMT
பெங்களூரு:

பெங்களூரு சிட்டி மார்க்கெட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 2 பேரும் கையில் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது பைகளில் சில ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்புகள் இருந்தன. ஆனால் அவர்கள் வைத்திருந்தது போலி ஆவணங்கள், போலி ரப்பர் ஸ்டாம்புகள் என்பது தெரிந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

  விசாரணையில் அவர்கள் 2 பேரும் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து சிறையில் இருக்கும் கைதிகளை ஜாமீனில் வெளியே எடுத்தது தெரியவந்தது. அதாவது சிறையில் இருக்கும் கைதிகளை ஜாமீனில் எடுக்க விரும்பும் உறவினர்களை குறிவைத்து அவர்களிடம் பேசி ரூ.30 ஆயிரம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து அதை கோர்ட்டில் கொடுத்து, அதன்மூலம் கோர்ட்டில் இருந்து ஜாமீன் வாங்கி கைதிகளை வெளியே எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஒரு பெண் உட்பட மேலும் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கைதான 9 பேர் மீதும் சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்