திருநங்கை கொலை வழக்கில் 4 மாதத்திற்கு பிறகு கல்லூரி மாணவர் கைது

பரங்கிப்பேட்டை அருகே திருநங்கை கொலை வழக்கில் 4 மாதத்திற்கு பிறகு கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். உல்லாசத்துக்கு மறுத்ததால் அவரை அடித்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

Update: 2022-04-23 20:11 GMT
பரங்கிப்பேட்டை, 

சிதம்பரம் அருகே உள்ள பால்ஊத்தங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பனிமலர்(வயது 32). திருநங்கையான இவர், கடந்த 13.12.2021 அன்று சக திருநங்கைகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் தைலமர தோப்பில் இருப்பதாகவும், தன்னை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், உடனடியாக காப்பாற்ற வருமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சக திருநங்கைகள், பரங்கிப்பேட்டை போலீசாருடன் பி.முட்லூர் தைலமர தோப்பிற்கு சென்றனர். அங்கு திருநங்கை பனிமலர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்மநபரை வலைவீசி     தேடி வந்தனர். 

போலீசாரை கண்டதும் ஓட்டம்

இந்த நிலையில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று காலை தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் பெரியகுமட்டி அருகே வந்தபோது சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் திடீரென அருகில் உள்ள ைதலமர தோப்புக்குள் ஓடினார். உடனே போலீசார் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருவதும், திருநங்கை பனிமலரை கொலை செய்ததும் தெரியவந்தது.
 
உல்லாசத்துக்கு  மறுத்ததால்... 

திருநங்கை பனிமலரை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசில் மாணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 13.12.2021 அன்று இரவு பனிமலரை உல்லாசத்துக்கு அழைத்தேன். அதற்கு அவர் பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று கூறினார். உடனே நான் என்னிடம் பணம் இல்லை என்று எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால் பனிமலர் வர மறுத்துவிட்டார்.

 இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த சிமெண்டு சிலாப்பை எடுத்து அவரது தலை, முகம் போன்ற பகுதிகளில் சரமாரியாக அடித்தேன். இதில் பனிமலர் சுருண்டு விழுந்து இறந்தார். உடனே நான் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இதுநாள் வரை தலைமறைவாக இருந்து வந்த நான் தற்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் என்றார். 

மாணவர் கைது

இதையடுத்து மாணவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த திருநங்கை கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைதான சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்