ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 46 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தது.;

Update: 2022-04-23 19:59 GMT
உடையார்பாளையம்:

ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, தஞ்சாவூர், கரூர், கடலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 650 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் அடக்க முயன்ற வீரர்களை பந்தாடின. சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் எல்லைக்கோட்டை நோக்கி விரைந்தன.
பரிசுப்பொருட்கள்
ஜல்லிக்கட்டின்போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 46 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 11 பேரில் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(வயது 20), அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெள்ளியம் ஜெரால்டு(24), கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(20) ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், குழுமூர் கிராமத்தை சேர்ந்த கொடியரசு(28), கோட்டியால் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(27), பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி(35) உள்ளிட்ட 8 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அண்டா, கட்டில், மின்விசிறி போன்ற பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
சிகிச்சை
முன்னதாக ஜல்லிக்கட்டை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிங்கராயபுரம், கோட்டியால், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்