இந்தியாவில் மீண்டும் சமையல் எண்ணெய் விலை உயரும்?
இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.;
விருதுநகர்,
இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாமாயில்
இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதில் 4 லட்சம் டன் பாமாயில் இந்தோனேசியாவிலிருந்தும், 3.8 லட்சம் டன் பாமாயில் மலேசியாவிலிருந்தும், மீதமுள்ள பாமாயில் தாய்லாந்து நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. வருகிற 28-ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும்?
பாமாயில் உற்பத்தி குறைவாலும் தென்கிழக்காசிய நாடுகளில் பாமாயில் விலை அதிகரிப்பாலும் இந்தோனேசிய அரசு இந்த உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஷியா, உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாமாயில் இறக்குமதி பிரச்சினையாலும் கடும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதுபற்றி சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஏற்கனவே ரஷியா, உக்ரைன் பிரச்சினையினால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ள நிலையில் உள்நாட்டில் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய பெரும் சிரமம் ஏற்படும்.
மாற்று நடவடிக்கை
இதனால் இதர சமையல் எண்ணெய் விலையும் உயர வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசு சமையல் எண்ணெய்க்கு 8 சதவீத இறக்குமதி வரியிலிருந்து முழுமையான விலக்களித்துள்ள போதிலும் சமையல் எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே மத்திய அரசு சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.