திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 27-ந் தேதி தூய்மைப்படுத்தும் பணிகள்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 27-ந் தேதி தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதில் பொதுமக்களும் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-04-23 19:05 GMT
ஜோலார்பேட்டை, 


திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 27-ந் தேதி தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதில் பொதுமக்களும் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்து ஊர்களிலும் நடக்கிறது. இது தொடர்பாகவும், குடிநீர் மேலாண்மை குறித்தும் ஏலகிரி மலையில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பங்கேற்று பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஆகிய 6 ஒன்றியங்கள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் வருகிற 27-ந் தேதி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். 

இது தொடர்பாக அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒரு கூட்டம் நடத்தி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

குடிநீர்

அனைத்து ஊரக உள்ளாட்சி, நகர்ப்புறங்களிலும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊரக உள்ளாட்சித் துறையின் சார்பில் வரும் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பட்டு இருக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு உள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 

மேலும் நமது மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் சாலை வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உத்தரவு

மேலும் ஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்க வழிப்பாதை மற்றும் காவல் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, இந்தப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, நகராட்சி பொறியாளர் கோபு மற்றும் தாசில்தார்கள், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்