பள்ளி மேலாண்மை குழு கூட்டமைப்பு உறுப்பினர் மறுதேர்வு
பள்ளி மேலாண்மை குழு கூட்டமைப்பு உறுப்பினர் மறுதேர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு உறுப்பினர் தேர்வு 290 அரசு நடுநிலைப்பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு உயர் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பள்ளிமேலாண்மை குழு மறுகட்டமைப்பு உறுப்பினர் தேர்வில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் என்னவெனில் பள்ளியின் தேவைகளை அறிந்து அதனை திட்டமிட்டு சமுதாய பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளிப்பதையும் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து கருத்துக்கள் வழங்குவதாகும். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுவதை பெற்றோர்கள், பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பள்ளிக்கு வந்துள்ள மானியம் பற்றியும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள மாணவர்களை பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.