அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

கொரோனா 4-வது அலையில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-23 19:00 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் (ஒரு நாளில்) பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே 4-வது கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும், குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டோர், தொற்று நோய் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இலவசமாக போட்டுக் கொள்ளலாம். முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், 3-வது தவணை தடுப்பூசியை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக போட்டு கொள்ளலாம். அதுவே 18 முதல் 59 வயதுடையோர் 3-வது தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். தொற்று பரவல் அலையாக மாறாமல் தடுக்க அனைத்து வயதினரும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருப்பது முக்கியம். அவ்வகையில் 12-14 மற்றும் 15-17 வயதினருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுவதால் இந்த வாய்ப்பை அனைத்து தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்