மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை

திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

Update: 2022-04-23 18:51 GMT
ராமநாதபுரம், 

திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து உள்ளனர்.

திறந்தவெளி கொள்முதல் நிலையங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததாலும் வைகை அணையில் இருந்து தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் நீர்ஆதாரம் மேம்பட்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயம் நன்றாக இருந்தது. குறிப்பாக நெல் விவசாயம் நன்றாக விளைந்து விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 நெல்கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு போதிய இடவசதி, பணியாளர்கள், சேமிப்பு கிடங்கு வசதி இல்லாத காரணத்தினால் சுமார் 40 இடங்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளும் சேமித்து வைக்க இடம் இல்லாமல் ரோடுகளிலும் பொது இடங்களிலும் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழைபெய்து வருவதால் இந்த நெல்மூடைகளில் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். 
இந்நிலையில் நேற்று ஏராளமான விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:-

நெல்மணிகள் முளைக்க தொடங்கின

 நெல்கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் கொள்முதல் செய்த நெல் மூடைகளை பாதுகாக்க போதிய இடம் இல்லை. சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இடம் தரமறுப்பதால் எங்களின் நெல்மூடைகள் அனாதையாக சாலைகளில் கிடக்கின்றன. நாங்கள் விளைவித்த நெல்மணிகளை எங்களின் கண் முன்னே மூடைகளில் முளைப்பதை கண்டு கண்ணீர் சிந்தி வருகிறோம். இதனை பார்க்கவா நாங்கள் பாடுபட்டு உழைத்து நெல்அறுவடை செய்தோம். 7 லட்சம் டன் கொள்முதல் செய்ய இலக்கு என்று நிர்ணயிக்கும் மாவட்ட நிர்வாகம் அதனை சேமித்து வைக்க இடம் தயாராக வைத்து கொள்ளாமல் இலக்கு நிர்ணயித்தது எந்த வகையில் நியாயம்.
நெல்கொள்முதல் செய்த இடங்களில் முறையான தார்ப்பாய் வசதி செய்து கொடுக்காததால் நாங்களே சாக்குகளை விலைக்கு வாங்கி மூடி வைத்துள்ளோம். பல இடங்களில் தார்ப்பாய் கிழிந்து மூடைகள் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன. நெல் கொள்முதல் செய்வதற்காக பதிவு செய்த பல விவசாயிகளிடம் இதுவரை கொள்முதல் செய்யவில்லை. பல இடங்களில் கொள்முதலை சேமிப்பு கிடங்கு இல்லாததால் நிறுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறி வாங்க மறுக்கின்றனர். பல பகுதிகளில் கொள்முதல் செய்த நெல்மூடைகளுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். 
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர். 

மேலும் செய்திகள்