கோட்டைப்பட்டினத்தில் வெறிச்சோடிய மீன்பிடி தளங்கள்
மீன்பிடி தடைக்காலம் அமலாகி உள்ளதால் கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடின.
கோட்டைப்பட்டினம்,
ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இப்பகுதியில் மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்கள் பெரும்பாலானோர் ராமேஸ்வரம், குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள மீன்பிடித் தளங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் என்பதால் மீன்பிடி தளத்தில் உள்ள சிறிய கடைகள் மற்றும் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இதனால் சில வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மீன்பிடி சார்ந்த சிறு தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.