திருமணத்திற்கு மறுத்த மகளை கட்டையால் அடித்துக்கொன்ற தாய்

அறந்தாங்கி அருகே திருமணத்திற்கு மறுத்த மகளை கட்டையால் அடித்துக்கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-23 18:36 GMT
புதுக்கோட்டை, 
காதல் விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 55). இந்த தம்பதியினரின் மகள் சத்யா (27). நர்சிங் படித்து முடித்திருந்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு ஒரு வாலிபரை சத்யா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் தாய் ஜெயலட்சுமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவை அங்கிருந்து சொந்த ஊருக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். வீட்டில் தாயுடன் சத்யா வசித்து வந்தார். இந்த நிலையில் காதலன் நினைவாகவே அவர் இருந்து வந்துள்ளார். சத்யாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் அவர் அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கட்டையால் அடித்துக்கொலை
கடந்த 21-ந் தேதி சத்யா தான் சென்னை செல்வதாகவும், அங்கு காதலனை திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருக்கிறார். இதனை தாய் ஜெயலட்சுமி கண்டித்து அவரை தடுத்து நிறுத்தியிருக்கிறார். அப்போது தாய்க்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, தான் பெற்ற மகள் என்றும் பாராமல் கட்டையால் சத்யாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு சத்யா பரிதாபமாக இறந்தார்.
தாய் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மகளை கொலை செய்த தாய் ஜெயலட்சுமியை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர். 
வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்