உலக புத்தக தினவிழா கொண்டாட்டம்

கரூர், லாலாபேட்டை, வெள்ளியணை பகுதிகளில் உலக புத்தக தினவிழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-04-23 18:29 GMT
கரூர்
கரூர், 
உலக புத்தக தினவிழா 
கரூர் தம்மாநாயக்கன்பட்டி ஊர்ப்புற நூலகத்தில் உலக புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு நூலக ஆர்வலர் பொம்மன் தலைமை தாங்கி, புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே நூல்கள் நமது நண்பன் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பொம்மன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் 100 மாணவர்களுக்கான உறுப்பினர் தொகையை செலுத்தி மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினர். 
இதில் தலைமையாசிரியர் (பொறுப்பு) மஞ்சுளா மற்றும் ஆசிரியர் ராஜலெட்சுமி கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
கிருஷ்ணராயபுரம் 
கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கிளை நூலகத்தில் உலக  புத்தக   தினத்தை முன்னிட்டு நூல்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை வாசகர் வட்ட தலைவர் கிருஷ்ணமாச்சாரி தொடங்கி வைத்து பேசினார். இதில் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
வெள்ளியணை
வெள்ளியணை கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வாசகர் வட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் பெரியண்ணன் வரவேற்றார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சுபோட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதேபோல் முஷ்டகிணத்துப்பட்டி ஊர்ப்புற நூலகத்தில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையிலும், ஜல்லிப்பட்டி பகுதி நேர நூலகத்தில் சமூக ஆர்வலர் சிவபாண்டி தலைமையிலும், கே.பி தாழைபட்டி ஊர்ப்புற நூலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாணிக்கம் தலைமையிலும் புத்தக கண்காட்சி நடைபெற்றது.


மேலும் செய்திகள்