நேர்முகத்தேர்வுக்கு சென்று மாயமான புதுமாப்பிள்ளை மர்ம சாவு
அரசு வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு சென்று மாயமான புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் கண்மாயில் இருந்து மீட்கப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம்,
அரசு வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு சென்று மாயமான புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் கண்மாயில் இருந்து மீட்கப்பட்டது.
புதுமாப்பிள்ளை மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டையை அடுத்த சூச்சகனேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விஜய்பிரபாகர் (வயது 29). முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 9 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்று, ஜனனி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி ராமநாதபுரத்தில் கால்நடைத்துறை பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு மோட்டார் சைக்கிளில் விஜய்பிரபாகர் சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
மாயமான அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்மாயில் இறந்து கிடந்தார்
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அழிந்திக்கோட்டை கண்மாய் பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் முகம் சிதைந்த நிலையில் இருந்தது.
விசாரணையில் அது மாயமான விஜய்பிரபாகர் என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு விஜய்பிரபாகரின் அருகில் கிடந்த அவரது செல்போனையும், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.