அரக்கோணம்-வெளிதாங்கிபுரம் வரை இயக்கப்பட்ட டவுன் பஸ் பாணாவரம் வரை நீட்டிப்பு
அரக்கோணத்தில் இருந்து வெளிதாங்கிபுரம் வரை இயக்கப்பட்ட டவுன் பஸ் பாணாவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெமிலி
அரக்கோணத்தில் இருந்து வெளிதாங்கிபுரம் வரை இயக்கப்பட்ட டவுன் பஸ் பாணாவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்துக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரக்கோணத்தில் இருந்து தடம் எண்:டி6 என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மின்சார அலுவலகம், ரெயில் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தினமும் வெளிதாங்கிபுரம் அருகில் உள்ள பாணாவரம் வந்து செல்ல வேண்டும்.
எனவே அந்தப் பஸ்சை 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாணாவரம் வரை நீட்டிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்த மாணவர்கள் தடம் எண்:டி6 டவுன் பஸ்சை பாணாவரம் வரை நீட்டிக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டனர்.
அந்தக் கோரிக்கைைய பரிசீலனை செய்த அமைச்சர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்றில் இருந்து டி6 டவுன் பஸ் காலை 10:30 மணிக்கு மகேந்திரவாடி வழியாகவும், மாலை 4 மணிக்கு வெளிதாங்கிபுரம், மோட்டுர் வழியாக பாணாவரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதற்கான தொடக்க விழா நடந்தது. அதில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் ஆகியோர் கொடியசைத்து பஸ்சை தொடங்கி வைத்தனர்.
விழாவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன், ஊராட்சி செயலாளர் ரத்தினம் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.