வாலிபரை காரை ஏற்றி கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை
செஞ்சி அருகே வாலிபரை காரை ஏற்றி கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த திருவதிகுண்ணம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 31), கார்த்தி(33), பிரகாஷ்(23), சத்யமூர்த்தி(39) ஆகியோர் சென்னையில் தங்கி டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-8-2012 அன்று செஞ்சியில் நடைபெற்ற நண்பரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரும் காரில் வந்தனர். பின்னர் அருகில் அப்பம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்த முடிவு செய்தனர்.
காரை ஏற்றி கொலை
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), ராஜசேகர், பாலமுருகன் ஆகியோருக்கும், வெங்கடேசன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் காாில் ஏறி, அப்பம்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரமேஷ் உள்பட 3 பேர் மீதும் மோதினர். இதில் ரமேஷ் உயிரிழந்தார். ராஜசேகர், பாலமுருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்தி, பிரகாஷ், சத்யமூர்த்தி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவா்கள் 3 பேரும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.