ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற 24 பேர் கைது
ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மறியலில் ஈடுபட முயன்ற 24 பேர் கைது செய்யப்பட்டனா்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரிஷிவந்தியம் காமராஜர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்கவில்லை.
அப்போது சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதன் மூலம் 3 பெண்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை கிராம மக்கள் தொடர்ந்து நடத்தினர். இவர்களிடம் மாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் கலைந்து சென்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.