பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-04-23 17:43 GMT

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 5-ந்தேதியும், பிளஸ்-1 தேர்வு வருகிற 10-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு வருகிற 6-ந்தேதியும் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு  கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

தேர்வு மையங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 9,625 மாணவர்கள், 9,989 மாணவிகள் என்று மொத்தம் 19,614 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்கள், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்கள், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்கள் என்று மொத்தம் 73 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தே்ாவை  73 தேர்வு மையங்களில் 10,800 மாணவர்கள், 10,589 மாணவிகள் என்று மொத்தம் 21,389 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 10834 மாணவிகள், 11667 மாணவர்கள் என்று மொத்தம் 22461 பேர் எழுத இருக்கிறார்கள். இவர்களுக்கென  கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களும், திருக்கோவிலூரில்  15, உளுந்தூர்பேட்டையில் 24 தேர்வு மையங்கள் என்று மொத்தம் 88 தேர்வு மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.  

ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு

இதில் மேல்நிலைப் பள்ளி தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பு மையமான 5 மையங்களிலும்,  6 இடைநிலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 3 வினாத்தாள் சேகரிப்பு மையங்கள் மற்றும் 73 மேல்நிலை தேர்வு மையங்கள்,

 88 இடைநிலை தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து மையங்களுக்கும் சுழற்சி முறையில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்து செல்லும் போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

கிருமிநாசினி தெளிப்பு

மின்வாரியத்துறையினர் தேர்வு மையங்கள், வினாத்தாள் மையம், விடைத்தாள் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் போக்குவரத்து வசதியை போக்குவரத்து துறையினர் ஏற்படுத்தி தர வேண்டும். 

அந்தந்த தேர்வு மையங்களில் நகராட்சி, ஒன்றியம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்களை எடுத்துச செல்வதை உறுதி செய்தல் மற்றும் தேர்வு எழுதும் மையங்களில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி அனைத்து தேர்வு பணிகளையும் தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்வதுடன், பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
 இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விஜயலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் பாலச்சந்தர், கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, மாவட்ட கல்வி அலுவலர்கள்  உளுந்தூர்பேட்டை  கார்த்திகா, கள்ளக்குறிச்சி சிவராமன், திருக்கோவிலூர் சுப்பிரமணி, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்