வேப்பூர் அருகே பரபரப்பு மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
வேப்பூர் அருகே பரபரப்பு மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
வேப்பூர்
விவசாயி மனைவி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மேல் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சுஜாதா(வயது 32). இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த களராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் வெங்கடேசன்(48) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.
திருமணமான நாளிலிருந்து கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டை நடந்து வந்ததுள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பூரை அடுத்த பில்லூர் பாகுளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
திடீர் மாயம்
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுஜாதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இதற்கிடையே வெங்கடேசன் நேற்று காலை 8 மணியளவில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் சுஜாதா பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்த தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சுஜாதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக சுஜாதாவின் தாய் வளர்மதி கொடுத்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுஜாதாவை யாரேனும் கொலைசெய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? அல்லது கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.