பரமத்தியில் ரூ.14 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் காணொலி காட்சி மூலம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி திறந்து வைத்தார்
பரமத்தியில் ரூ.14 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் காணொலி காட்சி மூலம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி திறந்து வைத்தார்
பரமத்திவேலூர்:
பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.
திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 3 கோர்ட்டுகள் தனித்தனி வளாகத்தில் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் பரமத்தியில் ரூ.14 கோடி மதிப்பில் நீதிபதிகள் குடியிருப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பரமத்தி புதிய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி சரவணன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் வழக்கு விசாரணை
பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் சார்பு நீதிமன்ற வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சார்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள், கலெக்டர் மற்றும் போலீசார் முன்னிலையில் புதிய கோர்ட்டில் முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பழனிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இதில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், பரமத்தி வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.