நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2022-04-23 17:34 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல், ராசிபுரம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலையோரங்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிந்தது. இந்த கோடை மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் ராசிபுரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் மாலை 6½ மணி அளவில் கனமழை பெய்தது. ராசிபுரம், ஆண்டகளூர்கேட், கவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
பரமத்திவேலூர், திருச்செங்கோடு
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கோடை கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கோடை மழை பெய்தது. திருச்செங்கோடு, எலச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர்
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பகுதிகளில் காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் அடித்தது. இதையடுத்து மாலை 6.30 மணி முதல் சாரல் மழையுடன் தொடங்கிய தொடர்ந்து 45 நிமிடம் கனமழையாக பெய்தது. இதில் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. இதேபோல் புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிளிலும் மழை பெய்தது.
வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, அத்தனூர், பழந்தின்னிபட்டி மற்றும் மின்னக்கல் பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 10 மணி வரை கொட்டி தீர்த்தது. பகலில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்த மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்