எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது
திண்டிவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மோகனா. இவர் தனது அண்ணியுடன் திண்டிவனம் தேவாங்கர் தெருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நேற்று மாலை சென்றார். அப்போது ஸ்கூட்டரை ஆஸ்பத்திரியின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். இந்த நிலையில் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் அந்த தீ அருகில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் பற்றியது.
ஆசிட் கசிந்து...
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதமானது. மற்றொரு மோட்டார் சைக்கிள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெப்பம் தாங்காமல் பேட்டரியில் இருந்து ஆசிட் கசிந்து தீப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.