கர்நாடகத்தில் விரைவில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும்- பா.ஜனதா தேசிய தலைவர் அருண்சிங்
கர்நாடகத்தில் விரைவில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அருண்சிங் கூறினார்
சிக்கமகளூரு: கர்நாடகத்தில் விரைவில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அருண்சிங் கூறினார்.
அருண்சிங் பேட்டி
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரிஹரபுராவில் உள்ள ஆதிசங்கராச்சாரியார் மடத்தில் மகா கும்பாபிஷேகம் விழா நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு கோடி கும்குமம் அர்ச்சனை, சண்டிகா யாகம் ஆகியவை நடந்து வருகிறது. இதையொட்டி அந்த யாகத்தில் நேற்று பா.ஜனதா தேசிய தலைவர்களில் ஒருவரான அருண்சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மடாதிபதி சங்கராச்சாரியாரின் சிஷ்யரான சரஸ்வதி சச்சிதானந்தா சுவாமிகளிடம் ஆசி பெற்றேன். கர்நாடகத்தில் மந்திரி சபையை விரைவில் மாற்றி அமைக்கப்படும். ஆனால் இந்த இடம் அரசியல் பற்றி பேசுவதற்கு தகுந்த இடம் கிடையாது. நான் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தேன். மழை வேண்டியும், மக்கள் நலமோடு வாழவும் கடவுளிடம் வேண்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றுமையாக இருப்பது முக்கியம்
இதையடுத்து அருண்சிங் உடன் வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. நான்
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன். அந்த பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறேன். பா.ஜனதா கட்சி பலம் வாய்ந்த கட்சியாகும். அனைவரும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம். மாநிலத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டுகொள்ளாமல் மக்களுக்கான வளர்ச்சி பணிகளில் பா.ஜனதாவினர் அனைவரும் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுடன் கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், சுகாதார துறை மந்திரி சுதாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.