கடத்தூர் அருகே வயலில் இறங்கி நெற்கதிர் அறுவடை செய்த கலெக்டர் திவ்யதர்சினி

கடத்தூர் அருகே தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, வயலில் இறங்கி நெற்கதிரை அறுவடை செய்தார். அவருக்கு விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.;

Update: 2022-04-23 16:49 GMT
மொரப்பூர்:
கடத்தூர் அருகே தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, வயலில் இறங்கி நெற்கதிரை அறுவடை செய்தார். அவருக்கு விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆய்வுக்கு சென்ற கலெக்டர்
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி கிராமத்தில் மாவட்ட அளவில் குறுவை சாகுபடியில் இந்த ஆண்டுக்கான அதிக மகசூல் குறித்த ஆய்வு மேற்கொள்ள விவசாயி ஆறுமுகம் என்பவரின் விவசாய நிலத்தில் நெல் பரிசோதனை திடல் அமைக்கப்பட்டது. இங்கு நெற்பயிர் அறுவடை மற்றும் மகசூல் ஆய்வு பணி நேற்று நடைபெற்றது.
நெற்பயிர் அறுவடையை மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கதிர் அரிவாளுடன் வயலில் இறங்கி விவசாய தொழிலாளர்களுடன் சேர்ந்து நெற்பயிரை அறுவடை செய்தார். 
மேலும் பரிசோதனை திடலுக்கான வயல்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலரின் பதிவேடு மற்றும் வேளாண்மை துறையினரின் படிவங்களை ஆய்வு செய்தார். 
விவசாயிகள் வாழ்த்து
மாவட்ட கலெக்டரும் விவசாயியாகவே மாறி நேரடியாக வயலில் இறங்கி நெல் அறுவடை செய்தது இப்பகுதியில் இதுவே முதன்முறை என்று கூறி மாவட்ட கலெக்டருக்கு அங்கிருந்த விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் தங்கள் வாழ்த்துக்களையும் அவர்கள் கலெக்டருக்கு தெரிவித்து மகிழ்ந்தனர். 
பின்னர் நெல் அறுவடை பரிசோதனை திடலில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரில் நெல் மகசூல் விவரத்தை எடையிட்டு அதன் எடையின் அளவை கலெக்டர் ஆய்வு செய்து சரிபார்த்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது:-
விவசாயிகளுடன் நானும் அறுவடை பணியில் ஈடுபட்டேன். இதுவரையில் நான் இதுபோன்ற விவசாய பணிகளில் ஈடுபட்டதில்லை. விவசாயப் பணி எவ்வளவு சிரமமான பணி என்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. விவசாயிகள், விவசாயிகளின் உழைப்பு அவர்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். விவசாயி சேற்றில் காலை வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அனைவரும் விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, துணை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் சவுமியன், பயிர் காப்பீட்டு திட்ட வேளாண்மை அலுவலர் தேவி, மொரப்பூர் வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் முகிலன், உதவி வேளாண்மை அலுவலர் கணேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்