மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

Update: 2022-04-23 16:46 GMT
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே 10 கி.மீ தொலைவிற்கு மின்மயமக்காப்பட்ட ரெயில் பாதையில் மின்சார ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் மத்திய ரெயில்வே மின்மயமாக்கல் அமைப்பு மற்றும் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது. 
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே அகல ரெயில் பாதை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேல்நிலை மின் உபகரணங்களின் செயல்பாட்டினை சரிபார்ப்பதற்கு இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 
110 கி.மீ. வேகத்தில்...
பெங்களுரூவில் உள்ள தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் வலியுறுத்தலின் பேரில் கட்டாய சோதனை ஓட்ட பரிசோதனை மணிக்கு 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் நேற்று முன்தினம் காலை நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையேயும், பின்னர் மதியம் வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் இடையேயும் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மத்திய ரெயில்வே மின்மயமாக்கல் அமைப்பு, நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே மின்மயமாக்கல் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவு செய்தது. அப்போது மின்சார ரெயில் என்ஜின் கொண்டு 30 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கடற்கரையோர பகுதி என்பதால் இந்த பாதையில் அப்போது அனுமதிக்கப்பட்ட வேகம் மிகவும் குறைவாகவே இருந்தது. 
பயணிகள் ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு அகல ரெயில் பாதை மேம்படுத்தும் பணியை நிறைவு செய்ததை அடுத்து தற்ேபாது அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. 
மின்சார ரெயில் என்ஜினின் இந்த அதிவேக சோதனை ஓட்டத்திற்கான மின்சாரம் காரைக்கால் துணை மின் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், மேல்நிலை மின் உபகரணங்களின் மென்மையான செயல்பாட்டினை உறுதிபடுத்துவதற்காகவும் இந்த சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் 
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு மேற்கொண்ட மேம்பாட்டு பணிகளில் முக்கிய பணியாக, மண்அரிப்பை தடுப்பதற்காக 4 கி.மீ தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. மேலும் பக்க சரிவுகள் நிலைபடுத்தப்பட்டு அரிக்கப்பட்ட கரையோர பகுதிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 
அகல ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் மற்றும் மின்மயமாக்கல் தொடங்குவதற்கு முன்னர் இந்த தடத்தில் ரெயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டு வந்தன.
பாதுகாப்பு ஆணையர் சோதனை 
ரெயில் பாதையில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கு அகல ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததையடுத்து திருச்சி ரெயில்வே கோட்டம் மற்றும் ரெயில்வே கட்டுமான அமைப்பின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மின்சார என்ஜினால் இயக்கப்பட்ட ரெயில் 110 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 
இந்த சோதனை ஓட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு ஆணையரின் சோதனைக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்