ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் கோபிநாத் (வயது 40). தச்சுதொழிலாளி. இவரது அத்தை குப்பாயி என்பவரிடமிருந்து முத்து மகன் சிங்காரவேல் ரூ.3 லட்சம் கடன் பெற்று 2 வருடங்களான நிலையில் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த கோபிநாத் பணத்தை திருப்பிக் கேட்டு சிங்காரவேலிடம் சண்டை போட்டதால் அது தொடர்பாக இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் அரசன்குட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின் போது முன்விரோதம் காரணமாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்காரவேல் அவரது மகன் தினேஷ்குமாருடன் மொபட்டில் கோபிநாத் வீ்ட்டுக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளிவிட்டு, வீட்டு முன்பு அமர்ந்து இருந்த கோபிநாத்தை தாக்கினார். அப்போது தினேஷ்குமார் மொபட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கோபிநாத்தின் பின் மண்டையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கோபிநாத்தை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகன் இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.