சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க போடி அரசு பள்ளி மாணவர் தகுதி

ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க போடி அரசு பள்ளி மாணவர் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2022-04-23 16:11 GMT
தேனி:
போடியை சேர்ந்தவர் கார்மேக கண்ணன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சத்தியநாராயணன் (வயது 11). இவர், சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 
கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் நடந்த தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடம் பிடித்தார். மேலும், அவர் இந்திய அளவில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலிலும் 2-வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் சத்தியநாராயணன், ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் வருகிற மே மாதம் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்க உள்ள சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில், 11 வயது முதல் 13 வயது வரையுள்ளோருக்கான பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து சத்தியநாராயணனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து மாணவரின் தந்தை கார்மேக கண்ணன் கூறுகையில், “எனது மகன் தேசிய அளவிலான போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளான். ஒவ்வொரு முறையும் போட்டிக்கு சென்று வர ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆனது. தற்போது சர்வதேச போட்டியில் பங்கேற்க ஜெர்மனி செல்வதற்கு விசா, போக்குவரத்து செலவு போன்றவற்றுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும். எனவே, அரசோ, பிறரோ உதவி செய்தால் நிச்சயம் எனது மகன் பதக்கம் வெல்வான்” என்றார்.

மேலும் செய்திகள்