அரசு பள்ளி வளாகத்தில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்; பொதுமக்கள் வேதனை
தேனி அரசு பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
தேனி:
தேனி அரசு பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
வெட்டப்பட்ட மரங்கள்
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் பழமையான புங்கை மரங்கள் நின்றன. பள்ளியை பசுமையான சோலையாக இந்த மரங்கள் மாற்றி இருந்தன. இதில் ஒரு பிரமாண்ட மரத்துக்கு அடியில் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைந்துள்ளன.
இதில் சமீபத்தில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையால் ஓரிரு மரங்களில் கிளைகள் சாய்ந்து தாழ்வாக இருந்ததாக கூறப்படுகிறது. கிளைகளை அகற்றுவதற்கு பதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்டமான 4 புங்கை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.
மக்கள் வாக்குவாதம்
இந்தநிலையில் இந்த பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அப்போது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு விறகு கட்டைகளாக குவிந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்டியதை கண்டித்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.
பள்ளிகளில் மரங்கள் நட்டு பராமரிக்கவும், மரங்களை பாதுகாக்கவும் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரை நியமித்து அரசு பல்வேறு பசுமை செயல்பாடுகளை செய்து வருகிறது. இந்த சூழலில் பசுமையாக நின்ற மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட சம்பவம் மக்களை வேதனை அடைய செய்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
விசாரணை
இதுகுறித்து தேனி வட்டார கல்வி அலுவலர் ஹெலனிடம் கேட்டபோது, "அந்த பள்ளியில் உள்ள மரங்களில் சில கிளைகளை பாதுகாப்பு கருதி அகற்ற உள்ளதாக கூறினர். ஆனால், மரங்கள் வேரோடு வெட்டப்பட்ட விவரம் தெரியாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.