புத்தகங்கள் வாசிப்பதால் கற்பனைத்திறன் மேம்படும்

புத்தகங்கள் வாசிப்பதால் கற்பனைத்திறன் மேம்படும் என நாகை அரசு கல்லூரி முதல்வர் கூறினார்.

Update: 2022-04-23 16:01 GMT
நாகப்பட்டினம்:
புத்தகங்கள் வாசிப்பதால் கற்பனைத்திறன் மேம்படும் என நாகை அரசு கல்லூரி முதல்வர் கூறினார்.
உலக புத்தக தின விழா
நாகை மாவட்ட நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் ஜவகர் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் மீனா குமாரி வரவேற்றார். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜாராமன் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
100 நண்பர்களுக்கு சமம்
புத்தகம் படிக்கும் பழக்கத்தால் மன அழுத்தத்தை குறைக்கிறது. எந்த சூழலையும் தைரியமாக எதிர்கொள்ளும் வலிமையை புத்தகங்கள் தருகின்றன. புத்தகங்கள் படிப்பதால் சிந்தனைவளரும். சிறந்த புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம். புத்தகங்களை விட சிறந்த நண்பர்கள் வேறு எதுவும் இல்லை. 
கடந்த காலங்களை எதிர்காலத்தோடு இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன .இன்றைய காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 
கற்பனைத்திறன் மேம்படும்
ஒவ்வொருவரும் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பதால் கற்பனைத்திறன் மேம்படுகிறது. தலை குணிந்து புத்தகங்களை படித்தால், தலைநிமிர்ந்து வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நாகை அனைத்து மகளிர் கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி , வாசகர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் புரவலர்கள், வாசகர்கள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலகத்தை சேர்ந்த நாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்