பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்க வேண்டும்; நளின்குமார் கட்டீல் ஆவேசம்
பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்க வேண்டும் என நளின்குமார் கட்டீல் ஆவேசமாக பேசினார்.
பெங்களூரு:
பெங்களூருவில் இன்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
உப்பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி உள்ளனர். போலீசார் மீதும், போலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளியிலும் இதுபோன்று கலவரம் நடந்திருந்தது. கர்நாடகத்தில் அடிக்கடி கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதுபோன்று அமைதியை கெடுப்பவர்கள், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குபவர்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கடுமையான சட்டத்தை அரசு கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும். இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் கடுமையான சட்டத்தை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபடுவோரின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளும் வகையில் சட்டம் இருக்கிறது. அதுபோன்று, கர்நாடகத்திலும் கொண்டு வர வேண்டும். மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், சில சமூக விரோதிகள், மதக்கலவரங்கள், பிற கலவரங்களை தூண்டிவிடும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.