தேர்வு முறைகேடு குறித்த ஆடியோவை தற்போது வெளியிட காரணம் என்ன?; மந்திரி அரக ஞானேந்திரா கேள்வி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு சம்பந்தப்பட்ட ஆடியோவை தற்போது வெளியிட காரணம் என்ன? என்று பிரியங்க் கார்கேவிடம் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கேள்வி எழுப்பி உள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூருவில் இன்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஆடியோ ஆதாரங்கள்
ஆடியோ வெளியிட காரணம்? சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். தற்போது முறைகேடு சம்பந்தமாக பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோ ஆதாரங்கள் தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
அப்படியென்றால், அப்போதே அந்த ஆடியோவை வெளியிட்டு இருக்க வேண்டும். தற்போது அவர் ஆடியோவை வெளியிட காரணம் என்ன? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரியங்க் கார்கேவின் ஆதரவாளர் கைதாகி இருக்கிறார். தனது ஆதரவாளர் கைதாகி இருப்பதால், தற்போது இந்த ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
பாதுகாக்க நினைக்க வில்லை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் வெளியானதில் இருந்து பல குற்றச்சாட்டுகளை பிரியங்க் கார்கே கூறி வந்துள்ளார். அப்போதெல்லாம் ஆடியோ பற்றி எதுவும் பேசவில்லை. தற்போது ஆடியோவை வெளியிட்டு இருப்பதன் பின்னணி என்ன?. தன்னிடம் ஆதாரம் இருந்தும் அவர் வெளியிடவில்லை என்றால், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தனது ஆதரவாளர் சிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கலாம்.
பிரியங்க் கார்கேவிடம் எந்த ஆதாரங்கள் இருந்தாலும், அதனை முதலில் சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்க வேண்டும். முறைகேடு சம்பந்தப்பட்ட விசாரணை நியாயமாக நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரையும் பாதுகாக்க அரசு நினைக்கவில்லை.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.