காசோலை மோசடி வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு 3 மாதம் சிறை
காசோலை மோசடி வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
நாசரேத் பிரகாசபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஜே. ஜமீன் சாலமோன் (வயது 62). பள்ளி தாளாளராக உள்ளார். இவரிடம், நாசரேத் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் நாசரேத் 2-வது கைலாசபுரம் தெருவைச் சேர்ந்த இம்மானுவேல் (52) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.14 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடனை டிசம்பர் மாதம் திருப்பி கொடுப்பதாக வங்கி காசோலை கொடுத்துள்ளார். காசோலையை வங்கி கணக்கில் வரவு வைக்க வங்கியில் கொடுத்தபோது இம்மானுவேல் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது.
இதுபற்றி ஜமீன்சாலமோன், சாத்தான்குளம் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 27.2.2014 அன்று வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரமேஷ் விசாரித்து, இம்மானுவேலுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், காசோலைக்குரிய தொகையை புகார்தாரருக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.