பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குழந்தைகளுடன் மயானத்தில் வசித்த பெண்ணுக்கு உதவித்தொகை-வீட்டு மனை பட்டாவும் வழங்கி கலெக்டர் திவ்யதர்சினி நடவடிக்கை
பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குழந்தைகளுடன் மயானத்தில் வசித்த பெண்ணுக்கு உதவித்தொகை மற்றும் வீட்டு மனை பட்டாவும் வழங்கி கலெக்டர் திவ்யதர்சினி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள முஸ்லிம் மயானத்திற்குள் ரஜியா என்பவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த கலெக்டர் திவ்யதர்சினி இதுகுறித்து விசாரணை நடத்த தாசில்தார் சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார். கணவரை இழந்த ரஜியாவிற்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. வறுமையில் உள்ள ரஜியாவுக்கு எதிர்கால நலன் கருதி உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாவும், மாதாந்திர உதவித்தொகையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி ரஜியாவுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் விதவை உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். அப்போது வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.