கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.18 லட்சம் மோசடி
கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 43), தனியார் நிறுவன ஊழியா். இவர் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நான் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது சொந்த ஊரில் இருந்தபடி வேலை பார்க்கிறேன். கப்பல் சார்ந்த பணியில் சேருவதற்காக பல்வேறு இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன். அப்போது எனது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பர செய்தியை கண்டேன். அதில் கப்பலில் பணியாற்றுவதற்கான தகுதியும், வேலைபற்றி தெரிந்து கொள்ள செல்போன் எண்ணும் குறிப்பிட்டிருந்தது.
ரூ.18 லட்சம் மோசடி
இதனைதொடர்ந்து அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். எனது கல்வி விவரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பணியாற்றிய விவரங்களை தெரிவித்தேன். உடனே எதிர்முனையில் பேசியவர் "உங்களுக்கான வேலை வெளிநாட்டில் அல்லது மும்பையில் உள்ளது என்றும், இதற்காக ரூ.18 லட்சம் தரவேண்டும்" என்றும் கூறினார்.
மேலும், அந்த நபர் எனது செல்போனுக்கு வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்பி அதில் ரூ.18 லட்சத்தை செலுத்துமாறு கூறினார். நானும் அவரது பேச்சை நம்பி பல தவணைகளில் ரூ.18 லட்சத்தை அந்த வங்கியின் கணக்கில் செலுத்தினேன். அதன் பின்னர், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான், நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பட்டதாரி வாலிபர் கைது
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனித் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதுதொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் புத்தன்கோட்டையை சேர்ந்த சைஜூ (34) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தோணியிடம் கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். சைஜூ பி.பி.ஏ. படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.