அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-23 14:56 GMT
தர்மபுரி:
அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேய்பிறை அஷ்டமி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளிக்கவச ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சத்ரு சம்ஹார யாகம்
இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்