ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல்
கடலூர் மாவட்டத்தில் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
கடலூர்,
தமிழ்நாடு நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் ஆதார ஒருங்கிணைப்பு திட்டத்தின்கீழ் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக வருகிற 29-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்படும். 2-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேட்புமனுக்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் செயல்திறனுள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெற 2-ந் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கடைசி நாளாகும்.
வாக்குப்பதிவு
இதுதவிர போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் அன்று மாலை வெளியிடப்படுவதுடன், தேர்தல் சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 8-ந் தேதியாகும். இந்த வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். மேலும் அன்று மாலை 4 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
விண்ணப்பம்
இதில் திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய தாலுகாக்களில் நடைபெறும் தேர்தல்களுக்கு, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும். இதில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவுக்கு விருத்தாசலம் கோட்டாட்சியரும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு கடலூர் கோட்டாட்சியரும், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகாவுக்கு சிதம்பரம் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்பட உள்ளனர். ஆகவே இந்த தேர்தலில் போட்டியிடும் நில உரிமைதாரர்கள், தலைவர் பதவிக்கு ரூ.300-ம், ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.200-ம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.