நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெளியூருக்கு கடத்தி செல்வதற்காக நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்,
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் உள்ள நடைபாதையில் அரிசி மூட்டைகள் இருப்பதாக, அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கு நடைபாதையில் இருந்த 21 மூட்டைகளை சோதனை செய்ததில், அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 21 மூட்டைகளில் இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடலூர் வில்வராயநத்தத்தை சேர்ந்த ராமசாமி (வயது 50) என்பவர், நெல்லிக் குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை வெளியூர்களுக்கு கடத்தி சென்று ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.