தொழிலாளி வெட்டிக்கொலை

திருச்சி அருகே பட்டப்பகலில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-23 13:56 GMT
ஜீயபுரம், ஏப்.24-
திருச்சி அருகே பட்டப்பகலில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலாளி
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் ஊராட்சி சுப்பராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  ரவிச்சந்திரன் (வயது 47). கூலி தொழிலாளி. மேலும் இவர் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் உள்ள காவிரி ஆற்றில் மீன்பிடித்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
நேற்று மதியம் இவர் குழுமணி மெயின்ரோட்டில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் பழுதான தனது மோட்டார் சைக்கிளை பழுதுநீக்க விட்டு, விட்டு அங்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் மெக்கானிக் கடைக்கு வந்தனர். திடீரென்று அந்த கும்பல் அங்கு நின்று கொண்டு இருந்த ரவிச்சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
வெட்டிக்கொலை
இதனால் அவர் உயிருக்கு பயந்து கடைக்குள் செல்ல முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் ரவிச்சந்திரனின் கழுத்தில் பலமாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக  இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் மோப்ப நாய் லீலி சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு கோப்பு பாலம் வரை ஓடி சென்று நின்றுவிட்டது.
தொழில் போட்டி காரணமா?
இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மீன்பிடி தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக ரவிச்சந்திரன் கொலை கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்