ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பெறப்பட்ட 171 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பெறப்பட்ட 171 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவோயிஸ்டு விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய்த்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் போலீசார் இணைந்து கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஆதிவாசி கிராமத்தில் மாவோயிஸ்டு குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமை தாங்கினார். தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் வரவேற்றார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய் சங்கர், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், துணை தாசில்தார் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார், வருவாய் ஆய்வாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை மனுக்கள்
கூட்டத்தில், வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது. உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்களை போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் தொடர்பாக 34 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோன்று தும்பனேரிகொம்பை, வாைழதோட்டம், கொப்பரகடவு, சின்னாலன்கொம்பை, சடையன்கொம்பை, பாலவாடி, காமராஜ்நகர், குறிஞ்சிநகர், நெல்லிபாரா, கோட்டகாரா, செவிடன்கொல்லி, அயனிபாரா, புதுசேரி, தோட்டபெரா ஆகிய ஆதிவாசி கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 137 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.