இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி - தொழிலாளர் நலத்துறை கோர்ட்டு நடவடிக்கை

டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் காஞ்சீபுரம் பணிமனையில் இருந்து 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து தொழிலாளர் நலத்துறை கோர்ட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.

Update: 2022-04-23 12:44 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சீபுரம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்த வழக்கில் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாததால் 2018-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின்படி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பணி வழங்காததால் சுப்பிரமணியன் தொழிலாளர் நலத்துறை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அதன் அடிப்படையில் வழக்கினை விசாரித்த தொழிலாளர் நலத்துறை நீதிபதி 5 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டிக்கும் விதத்தில் டிரைவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.19 லட்சத்து 66 ஆயிரம் வழங்கிட உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதனையடுத்து அரசு பஸ்களை ஜப்தி செய்திட கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி காஞ்சீபுரம் பணிமனையில் இருந்த 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் செய்திகள்