ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தந்தால் ரூ.50 லட்சம் சன்மானம்

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-23 12:03 GMT
திருச்சி, ஏப்.24-
ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கு
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இருந்த போதிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை.
இந்த நிலையில் ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கினால் மீண்டும் வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்  சிறப்பு புலனாய்வு குழு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.50 லட்சம் சன்மானம்
இந்த கொலை வழக்கு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள் கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும். இந்த வழக்கை துப்பு துலக்க சரியான தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கொலை வழக்கு சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த தனிப்படையினர் மதுரை, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமைச்சரிடம் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை துணை கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 198 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. ராமஜெயத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் அமைச்சர் கே.என்.நேருவிடமும் 2 முறை விசாரித்து உள்ளோம். அவர்களின் குடும்பத்தினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.
மேலும் இந்த விசாரணை குழு ராமஜெயத்துடன் தொழில் தொடர்பில் இருந்தவர்கள், தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்