திருநின்றவூர் அருகே சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருநின்றவூர் அருகே சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்கம் பழைய காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீப காலமாக இந்த பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் கைகளில் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்காத பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அன்றாடம் சரியாக குடிநீர் வழங்கவேண்டும் என்றும், அந்த பகுதியில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.