திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் ஓட்டம்; மணமகன் தற்கொலை
கோவளம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் ஓடியதால் மணமகன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் மதுரைமுத்து (வயது 30). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வேலூர் மாவட்டம், பேரணம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த திருமணம் கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் மதுரைமுத்து மிகவும் மனவேதனையில் இருந்து உள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையே வீட்டில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மதுரைமுத்து, வீடு திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவளம் அடுத்த வடநெம்மெலி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள மரத்தில் மதுரைமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.