சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-23 05:03 GMT
ஆவடி,

ஆவடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் பூந்தமல்லி சென்றுவிட்டு மீண்டும் ஆவடிக்கு வந்து கொண்டிருந்தார். ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச். சாலையில் வரும்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, உடனடியாக மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடினார்.

பெட்ரோல் கசிவு காரணமாக மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது. காற்றின் வேகத்தில் மோட்டார்சைக்கிள் முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அந்த வழியாக வந்த தண்ணீர் டிராக்டரை நிறுத்தி அதில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்